Thursday, February 15, 2024

ஞானத்தேடல் - Ep 128 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குல்லை, பிடவம், சிறுமாரோடம் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்


குல்லை


கஞ்சங்குல்லைப்பூ, கஞ்சாங்கோரை, மலைப்பச்சை, புனத்துளசி, நாய்த்துளசி, திருநீற்றுப்பச்சை


குல்லைக்கண்ணி வடுகர் முனையது

வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,

வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே!

- மாமூலனார்


குல்லை குளவி கூதளம் குவளை 

இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் - நற்றிணை


முடித்த குல்லை இலை உடை நறும் பூ - திரு 201


மெல் இணர்க் கொன்றையும், மென்மலர்க் காயாவும்,

புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,

குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்

கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்

பல்லான் பொதுவர் கதழ்விடை கோட்காண்பார்

முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன

பல்லர், பெருமழைக்கண்ணர், மடம் சேர்ந்த

சொல்லர், சுடரும் கனங்குழைக் காதினர்,

நல்லவர் கொண்டார் மிசை,

- கலித்தொகை 103


இச்செடிகள் மலிந்த காடாக வளர்ந்து இருக்கும் என்பதைப் "குல்லையம்புறவு என்றார் நத்தத்தனார்

குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த - சிறுபானாற்றுப்படை 29


குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் – பொருநராற்றுப்படை 234


பிடவம்


அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன

செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்

நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்

பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்

வள மலை நாடன் நெருநல் நம்மொடு     

கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,

சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது

அல்லல் அன்று அது காதல் அம் தோழி!

தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா

வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி    10

கண்டும், கழல் தொடி வலித்த என்

பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!           

- நற்றிணை 25


இலை இல பிடவம் 


இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,

புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,

பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்

பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,

கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து

- நற்றிணை 242


‘பிடா’ என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரம், சங்க இலக்கியத்தில் பிடவு மற்றும் பிடவம் என்று வேறு சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


வள மழை பொழிந்த வால் நிறக் களரி,

உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்

தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,

வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்

கை மாண் தோணி கடுப்ப, பையென,  

மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்

- அகநானூறு 344


பிடவூர் என்பது சங்க கால ஊர்களில் ஒன்று. 


தித்தன்

செல்லா நல் இசை உறந்தைக் குணாது,

நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர்     

அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், 

புறநானூறு 395


அம்மானே ஆகமச் சீலர்க்கு அருள் நல்கும்

பெம்மானே பேரருளாளன் பிடவூரன்

தம்மானே தண்டமிழ் நூல் புலவாணர்க்கு ஓர்

அம்மானை பரவையுண் மண்டலி அம்மானே

சுந்தரர் தேவாரம் 


சிறுமாரோடம்


இதனைச் செங்கருங்காலிப் பூ என நச்சினார்க்கினியர் உரை கூறுவார். இது நறு மோரோடம், பசுமோரோடம், சிறுமாரோடம் என்ற பெயர்களால் வழங்கப்படும். 


உலகம் படைத்த காலை தலைவ!

மறந்தனர் கொல்லோ சிறந்திசி னோரே

முதிரா வேனில் எதிரிய அதிரல்

பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்

நறுமோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய

செப்பிடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்

அணிநிறங் கொண்ட மணிமருள் ஐம்பால்

தாழ் நறுங்கதுப்பில் பையென முழங்கும்

அரும்பெறற் பெரும் பயம் கொள்ளாது

பிரிந்துறை மரபின் பொருள் படைத்தோரே-நற். 337


எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தென,

பசுமோரோடமோடு ஆம்பல் ஒல்லா                             

என்ற ஐங்குறுநூற்றுப் பாடலும் குறிப்பிடுகின்றன.


கோடம்பாக்கம் புரசவாக்கம், பனம்பாக்கம், அரசம்பாக்கம்


கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி 

சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்

காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது

ஈரிரவும் தூங்காது என் கண்

No comments: