பிள்ளைத்தமிழ்
தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு" எனவும் “பிள்ளைக்கவி” என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும். அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
Pillai Tamizh
In Tamil literature there is a specific types of song where a favourite God or a hero is personified as a baby and songs are sung in praise indicating the various stages of the baby's life from 3 months to 21 months. That form is called the Pillaithamizh. Let's explore that in this episode...
References
பன்னிரு பாட்டியல் - Panniru Paatiyal
பெரியாழ்வார் திருமொழி - Periyaazhwar Thirumozhi
ஆண்டாள் பாசுரம் - Thiruppaanazhwar Pasuram
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ - திருக்குறள்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
தொல்காப்பியத்தில் இடம்பெறும் “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற புறத்திணையியல் நூற்பாவே இவ்விலக்கியத்தின் தோற்றுவாய்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது.
பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்களைக் கொண்டது.
காப்பொடு செங்கீரை தால்சப் பாணி
யாப்புறு முத்தம் வருகவென் றன்முத
லம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர்
நம்பிய மற்றவை சுற்றத் தளவென
விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர்
- பன்னிருபாட்டியல்
சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றாரிய முத்தமே வாரானை - போற்றாரிய
அம்புலியே யாய்த்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து "
- வெண்பாப் பாட்டியல்
பிள்ளைப் பாட்டே தெள்ளிதிற் கிளப்பின்
மூன்று முதலா மூவே ழளவும்
ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே.”
“ஒன்று முத லையாண் டோ தினும் வரையார்''
- பன்னிருபாட்டியல்
திருந்திய பெண்மக வாயின் விரும்பிய
பின்னர் மூன்று மன்னுநீக் கென்றனர்
பெண்பா லாயிற் பின்னர் மூன்று
மன்னுதல் நீக்கினர் வாய்மொழிப் புலவர்
சிற்றில் சிறுதேர் சிறுபறை யொழித்து
மற்றவை மகளிர்க்கும் வைப்ப தாகும்
சிற்றி லிழைத்தல் சிறுசோ றாக்கல்
பொற்பமர் குழமகன் புனைமணி யூசல்
யாண்டீ ராறதி லெழிற்காம னோன்பொடு
வேண்டுத றானும் விளம்பினர் புலவர்
பின்னைய மூன்றும் பேதையர்க் காகா
ஆடுங் கழங்கு அம்மானை ஊசல்
பாடுங் கவியால் பகுத்து வகுப்புடன்
அகவல் விருத்தத் தாள் கிளையளவாம்
- இலக்கண விளக்கப் பாட்டியல்
ஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்
• மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
ஆகியன சிறப்புடைய பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.
தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலா அம்புலீ சந்திரா வாவென்று
நீநிலா நின்புகழா நின்ற ஆயர்தம்
கோநிலாவக் கொட்டாய் சப்பாணி
குடந்தைக் கிடந்தானே சப்பாணி.
- பெரியாழ்வார் பாசுரம்
பெய்யு மாமுகில் போல்வண்ணா, உன்றன்
பேச்சும் செய்கையும் எங்களை
மையலேற்றி மயக்க உன்முகம்
மாய மந்திரந்தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற் குன்னை
நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே.
பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும்.
ஆயினும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 11 பருவங்களையும், தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டு பருவங்கள் கொண்டதாகவும் பாடப்பட்டுள்ளன.
ஊர்ப் பெயர்களிலும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் உள்ளன. உதாரணமாக
* அந்தகக்கவி வீரராகவர் செய்யூர் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதியுள்ளார்.
* சிதம்பர முனிவர் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் என்பதை எழுதியுள்ளார்.
* அங்கப்ப நாவலர் என்பார் பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ் என்பதை எழுதினார்.
* வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வாகடப் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதினார்.
வாகடம் என்றால் மருத்துவ நூல்.
* ஒரு சாதிக்கே உரிய பிள்ளைத் தமிழாக செங்குந்தர் பிள்ளைத்தமிழ் என்பது அமைந்துள்ளது.
நாதன் விளையாட் டறுபத்து நாலு நடத்தும் தமிழ்மதுரை
நாலா யிரத்து நானூற்று நாற்பத் தொன்ப தருட்புலவர்
ஓதும் தலைச்சங் கத்தினுக்கு முயர்நா னூற்று நாற்பதுடன்
ஒன்பதான தமிழ்ப்புலவ ரொழியா இடைச்சங் கத்தினுக்கும்
வேத னிகர்நக் கீரர்முதல் விரிவா நாற்பத் தொன்பதுபேர்
மேவும் கடைச்சங் கத்தினுக்கும் விதிசொல் குருவா மகத்தியற்கும்
ஆதி குருவா மாறுகுணத் தமலா தாலோ தாலேலோ
ஆல வாய்வா ழாறுமுகத் தையா தாலோ தாலேலோ.
- க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் பாடல்
No comments:
Post a Comment