Thursday, July 24, 2025

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு...

 "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு", இந்த பழமொழியை பெற்றோர் மற்றும் ஆசிரியர் வாயில் அறிவுரையாகவோ வசையாகவோ கேட்காத பிள்ளைகள் அரிது. கேட்காவிட்டால் எடுத்த பிறவியின் பயன் இருக்காது!


தமிழர் வாழ்வில் சரியான அர்த்தம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் உபயோகப்படுத்தும் பழமொழிகள் உண்டு. காலப்போக்கில் சில  பழமொழி திரிந்து வேறாக மாறியதும் உண்டு (குருவிக்கு ஏத்த ராமேஸ்வரம்). சில தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும் உண்டு (அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க). அப்படி இந்த "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" பழமொழியை ஆராய்ச்சி செய்வோம்.


விவசாயம், வண்டி இழுக்க, பால் கறக்க என மாடுகளை வைத்திருப்போர் கூறும் விளக்கங்கள் 

  • சண்டித்தனம் மற்றும் முரட்டு குணம் கொண்ட மாடுகளுக்கு தண்டனையாகவும் அதன் முரட்டு குணம் போகவும்
  • காளை கன்றுகளை எருதாக்கவும்

சூடு வைப்பது வழக்கம். இதில் அடங்காத மாடுகளுக்கு பல தடவை சூடு உண்டு. நல்ல அடக்கமான மாடுகளுக்கு ஒரு சூடு போதும். 


இந்த விளக்கம் சற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே ஏனெனில் இந்த சூடு வைப்பது நடைமுறையில் இருந்தது, இருக்கிறது என்றும் கூறலாம். ஆனால் சில முரட்டு மாடுகளுக்கு எத்தனை சூடு போட்டாலும் அதன் அடிப்படை முரட்டு குணம் மாறாது.


அடுத்த விளக்கம் இணைய மொழி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வாட்ஸ்அப் பல்கலைக்கழக மொழிவல்லுனர்கள் தங்கள் மூளையை கசக்கி பிழிந்தபோது வழிந்து ஓடிய விளக்கம் எனலாம்‌. 


அதாவது, "நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு" என்பது மருவி "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" என மாறியதாக அவர்களது கருத்து. அதன் விளக்கவுரை, நல்ல மாடாக இருந்தால் அதன் கால் சுவடு நன்கு பதியுமாம். அல்லாத மாட்டுக்கு சுவடு இருக்காதாம். இப்போது வடிவேலு போல நினைக்கக்கூடும், "என்னடா பித்தலாட்டமா இருக்கு, எந்த மாடு எங்க கால் வெச்சாலும் சுவடு விழுமேடா..."


"அப்போ இதுக்கு என்னதான் அர்த்தம்...?" என்று தோன்றும். இது பொற்கொல்லர்கள் பயன்படுத்திய ஒரு பழமொழி என்று கூறினால் ஆச்சரியமாக இருக்கும். 


மாடு என்றால் பொன், தங்கம் அல்லது செல்வம் என்று பொருள். காட்டில் விறகு வெட்டச்சென்ற சிவவாக்கியரை சிவபெருமான் சோதிக்க எண்ணி அவர் வெட்டிய மூங்கிலில் இருந்து தங்க உமியை கொட்டச் செய்தார். அதைப் பார்த்த சிவவாக்கியர் இறைவன் திருவிளையாடல் என உணர்ந்து, இது ஆட்கொல்லி என அலறியடித்து ஒட. இதைக்கண்ட நான்கு திருடர்கள் அதை அடைய நினைத்து ஒருவரை ஒருவர் துரோகம் செய்து உயிர்விட்டு சிவவாக்கியர் ஆட்கொல்லி என கூறியது உண்மை என்றானது. இந்த சம்பவம் நடந்த பின் சிவவாக்கியர் இறைவனை நினைத்து பாடிய பாடல்


ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்

மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ

கோடு காட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா

வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே


பாட்டின் பொருள்:  ஒரு ஆட்டை கூண்டில்  வைத்து புலியை பிடிப்பது போல. இறைவா என்னை இந்த பொன்னை காட்டி மதி மயக்கி அகப்படுத்த நினைக்கலாமோ? யானையாக வந்த அசுரனை கொன்று தந்தமும் ஈரற்குலையும் தெரிய உரித்துப்  வெளிப்படுத்தி அவன் யானைத்தோலை போர்வையாக போர்த்தியது போல என்னுள் இருக்கும் நீ வெளிப்பட்டு எனக்கு வீடுபேறு என்ற முக்தியை அருவாய்


இதில் மாடு என்ற சொல்லை பொன், தங்கம் என்ற பொருளில் குறிப்பிடுகிறார்.


அதே போல் வள்ளுவரும் 


கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு 

மாடல்ல மற்றை யவை. (400)


என்ற குறளில் மாடு என்று பொன் அல்லது செல்வம் என்ற பொருளில் கூறுகிறார்.


குறள் விளக்கம்: ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றவை அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல.


இந்தக்குறளை கழுத்து நரம்புகள் புடைக்க ஆவேசமாய் பேசி அனர்த்தம் சொன்ன பிரபலங்கள் உண்டு...😀 (தேட வேண்டாம், you have been warned😜)


அதெல்லாம் சரி பொற்கொல்லர்களுக்கு இதில் என்ன சம்பந்தம்? 


ஆபரணங்கள் செய்யும்போது தங்கத்தை நெருப்பில் உருக்குவார்கள் (சூடு). அப்படி உருக்குபோது நல்ல தங்கம் என்றால் ஒருமுறை உருக்கினால் போதும். அதுவே மற்ற உலோகங்கள் (பித்தளை, செம்பு) கலந்து இருந்தால் அந்த தங்கத்தை சுத்தி செய்ய பலமுறை உருக்க வேண்டும். 


அதனால் நல்ல தங்கம் எனில் ஒரு சூடு போதும். கலப்படத் தங்கம் பலமுறை சூடு வேண்டும். 


இதுவே நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. Hence proved! 😀


பாவம் இத்தனை காலம் இந்த சூட்டை மிருக மாடுகளும், சில மனித மாடுகளும் மற்றும் அப்பாவித் தறுதலைகளும் வாங்கியிருக்கிறார்கள் 😀


இனி வரும் காலங்களில் இந்த சூடு "தங்க மாட்டுக்கு" மட்டுமே இருக்கட்டும்! 🙂


மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம். அதுவரை....