Tuesday, January 16, 2024

ஞானத்தேடல் - Ep 123 - எண்ணலங்காரம் - (Gnanathedal)

 

எண்ணலங்காரம்


ஆறுமாறு மாறுமாயொ

      ரைந்துமைந்து மைந்துமாய்,

ஏறுசீரி ரண்டுமூன்று

      மேழுமாறு மெட்டுமாய்,

வேறுவேறு ஞானமாகி

      மெய்யினொடு பொய்யுமாய்,

ஊறொடோ சை யாயவைந்து

      மாய ஆய மாயனே


முதலில் ஆறு தொழில்களைச் சொல்கிறார் - படிப்பது, கற்பது, படிக்க வைப்பது, கற்பிப்பது, கொடுப்பது, பெறுவது


இரண்டாவது ஆறாக, இந்தக் காரியங்கள் செய்வதற் கான ஆறு பருவ காலங்களைச் சொல்கிறார். அவை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில், என்று ஆவணி முதல் இரண்டு இரண்டு மாதங்களாகக் கணக்கிடப்படும் பருவங்கள். அந்தந்தக் காலத்தில் அந்தந்தக் காரியங்கள் செய்யவேண்டும் என்கிற நியதியைக் குறிப்பிடுகிறார்.


மூன்றாவதாக ஆறு யாகங்களைக் குறிப்பிடுகிறார்: வேதம் ஓதல், ஓமம் வளர்த்தல், பலி கொடுத்தல், தர்ப்பணம் செய்தல், இரப்போர்க்களித்தல் போன்றவற்றை, யாகங்கள் செய்பவர்கள், அனுஷ்டிக்கத் தக்க ஆக்னேயம், அக்னீஷோமியம் போன்ற ஆறு காரியங்கள் உள்ளன அவைதான் ஆழ்வார் குறிப்பிடும் மூன்றாவது ஆறு.


இனி ஐந்துக்களைப் பார்க்கலாம்.


முதல் ஐந்து, ஐந்து யக்ஞங்களாகும். தேவர்களுக்கு, முன்னோர்களுக்கு, இயற்கைக்கு, மனிதர்களுக்கு, பிரம்மாவுக்கு என்று ஐந்து யக்ஞங்கள் சொல்கிறார்.


இரண்டாவது ஐந்து உண்ணும்போது செய்யப்படும் ஐந்து ப்ராண ஆஹூதிகளைச் சொல்கிறாராம். மூன்றா வது, ஐந்து வகை அக்கினி. இவைகளுக்கெல்லாம் உள்ளுறை வடிவமாக இருப்பவன் திருமால்தான்.


இவைகளையெல் லாம் கடைப்பிடிப்பதால் ஏற்படும் சிறப்புக்களான (ஏறு சீர்) அறிவும் வைராக்கியமும் ஆழ்வார் சொல்லும் இரண்டு.

இதனால் ஏற்படும் பயன்கள் மூன்று: செல்வம், கைவல்யம் என்னும் மோட்சம், பகவதப்ராப்தி என்னும் வைகுந்தம்.


ஆழ்வார் சொல்லும் ஏழு. இந்த உபாயங்களின் முதல் படியை அடைய வேண்டுமென்பார் முதலில் பெறவேண்டிய ஏழு சாதனங்களான (1) விவேகம், (2) விமோஹம் (3) அப்யாசம் (4) க்ரியா (5) கல்யாணம் (6) அனவசாதனம் (7) அனுத்தர்ஷம் என்றவற்றையும் கற்ப்பிப்பவன் நீயே.


இவ்வாறு உன்னை அடைபவர்களுக்கு குணாதிசயங்களாக (1) ஞாநம் , (2) பலம், (3) ஐஸ்வர்யம், (4) வீர்யம் (5)சக்தி, (6) தேஜஸ்


அவர் குறிப்பிடும் எட்டு பலன்கள். அவை பாபமற்ற தன்மை, கிழத்தனம் அற்ற தன்மை, மரணமற்ற தன்மை,சோகமற்றிருப்பது, பசியற்றிருப்பது/தாகமற்றிருப்பது, வீண் போகாத இஷ்டம், வைராக்கியம்


"மெய்யினோடு பொய்யுமாய்" என்ற சொற்றொடர் சிந்திக்கத்தக்கது ஆழ்வார் பாடல்களில் இவ்வகையில் எதிர்மறைகள் பல இடங்களில் வரும். "உளன் எனில் உளள் அவன் உருவம் இவ்வருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்" என்று நம்மாழ்வாகும், மெய்யாககே மெய்யனாகும் பொய்யர்க்கே பொய்யனாகும்"என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலையிலும், "மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கெல்லாம்" என்று திருவாய்மொழியிலும் கூறுவதன் உள்ளர்த்தம், மற்ற தெய்வங்களைத் தொழுதாலும் அவைகளினுள்ளும் விரவியிருப்பது, மேலும் அவன் இன்மையும் அவனே என்கிறது புரடசிகரமான கருத்து.


ஆழ்வார் இறுதி அடியில் கூறும் ஐந்து, நாம் முதல் பாட்டில் விரிவாக உரைத்த ஐந்து குணங்களான ஒலி, தொடுகை,உருவம் சாரம், மணம்


திருமழிசை ஆழ்வாரின் ஒரு பாடலில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றன



ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே



ஒரு கோட்டன் இருசெவியன் மும்மதத்தன்

    நால்வாய்ஐங் கரத்தன் ஆறு

தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான்

    தரும் ஒருவா ரணத்தின் தாள்கள்

உருகோட்டன் பொடும்வணங்கி யோவாதே

    இரவுபகல் உணர்வோர் சிந்தைத்

திருகுஒட்டும் அயன் திருமால் செல்வமும்ஒன்

    றோ, என்னச் செய்யும் தேவே!

- சிவஞானசித்தியார்


இன்புற வழிகள் ஏழு


ஒன்றில் இரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால்

வென்று களங்கொண்ட வெல்வேந்தே – சென்றுலாம்

ஆழ்கடல்சூழ் வையத்துள் ஐந்துவென்(று) ஆறகற்றி

ஏழ்கடிந்(து) இன்புற்(று) இரு.

- புறப்பொருள் வெண்பாமாலை


காளமேகப் புலவர் பாடல்


ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு ஏழெட்டு

ஒன்பது பத்துப் பதினொன்று பன்னி

ரண்டுபதின் மூன்றுபதி நான்குபதி னைந்துபதி

னாறுபதி னேழுபதி னெட்டு.


ஒன்று கொலாம் என்று தொடங்கும் அப்பர் பிரானின் பதிகம் (4.18), விடம் தீர்த்த பதிகம் என்று அழைக்கப்படும் பதிகம், பாம்பு கடித்து இறந்த அப்பூதி அடிகளின் மூத்த மகனை உயிருடன் எழச் செய்த பதிகம், மிகவும் பிரபலமானது. அந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் ஒன்று, இரண்டு என்று பத்து வரை உள்ள எண்களை உணர்த்தும் சொற்களை முதற்சொல்லாக நான்கு அடிகளும் உள்ளவாறு அமைக்கப் பட்டுள்ளன. அதே வகையில் அமைந்த பதிகம் தான், ஒன்று வெண்பிறை என்று தொடங்கும் இந்த திருக்குறுந்தொகை (5.89) பதிகமும்.


திருவெழு கூற்றிருக்கை

ஓருருவாயினை என்று தொடங்கும் திருஞானசம்பந்தரின் திருவெழு கூற்றிருக்கை பதிகம் (1.128) தேரின் அமைப்பினை உணர்த்தும் எண்ணலங்கார பதிகமாக உள்ளது.

No comments: