Sunday, December 10, 2023

ஞானத்தேடல் - Ep 117 - திருப்புகழ் சுப்பிரமணிய பிள்ளை (Gnanathedal)


 திருப்புகழ் சுப்பிரமணிய பிள்ளை


பூவரு மம னயிற்கரச் செவ்வேள் பொன்னடி யேநினைந் துருகித்

தரவரு மருண கிரிப்பெருங் கவிஞன் சாற்றிய திருப்புகழ் பலவும்

மேவரு நிலையை யுணர்ந்தவ னருளே மெய்த்துணை யாக்கொடுதேடி

யாவரும் பெறச்செய் சுப்பிரமணிய வேந்தல்சீ ரியம்புறற்பாற்றோ


வடக்குப்பட்டு தணிகாசலம் சுப்பிரமணிய பிள்ளை என்னும் வ.த. சுப்பிரமணிய பிள்ளை, செங்கல்பட்டில், 1846 டிசம்பர் 11ம் நாளன்று தணிகாசலம் பிள்ளை-இலக்குமியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.


வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர் களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர்.


வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை

மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே...


பொருள்:


வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே....


திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,


“எம் அருணகிரிநாதன் ஓதும்

   பதினாராயிரந் திருப்புக ழுமுதமே”

-வரகவி மார்க்க சகாய தேவர்


தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின.....


(1) 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன.

(2) 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன.

(3) அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன.

(4) 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன.

(5) 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.


உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது "என் சரித்திரம்" நூலில் பதிவுசெய்துள்ளார்.


அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,


"எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே" என்ற வாக்கால் கூறியுள்ளார்.


ஆனால் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் மட்டுமே சேகரிக்க முடிந்தது.


திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார்.


1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார்.


வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.


- இவரது மறைவிற்குப் பின் இவரது மகன்களான வ.சு. சண்முகம் பிள்ளை மற்றும் வ.சு. செங்கல்வராய பிள்ளை இருவரும் இணைந்து திருப்புகழ்ப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர்.

- அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் ஸ்ரீ செங்கல்வராயன், பணியை முன்னெடுத்துச் சென்று மேலும் பல பாடல்களைப் பெற்று, கந்தர் அநுபூதி, அலங்காரம், வகுப்பு உள்ளிட்ட திருப்புகழ்ப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டார். செங்கல்வராயன் திருப்புகழ் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து, “அருணகிரிநாதர் வரலாறு, நூல் ஆராய்ச்சியும்” என்ற தலைசிறந்த படைப்பை வெளியிட்டார். 

- இவருடைய வாழ்க்கை வரலாற்றை 121 பாடல்களாக 'திருப்புகழ் சுப்பிரமணிய நாயனார்’ என்ற தலைப்பில் வரகவி தென்னுர் சொக்கலிங்க பிள்ளை பாடியுள்ளார்.

- வ.சு. செங்கல்வராய பிள்ளையும் தந்தையின் மறைவுக்குப் பின் அவரது வாழ்க்கை வரலாற்றை, 'வ. சுப்பிரமணிய பிள்ளை சரித்திரம்’ என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்திருக்கிறார்.


நூல்கள்


எழுதியவை


- பிரச்னோத்திர காண்ட வசனம்

- கோகர்ணபுராண சாரம்

- சுந்தர விளக்கம் (1904)

- சிவஸ்தல மஞ்சரி (1905)


பதிப்பித்தவை


- திருப்புகழ் (இருபதிப்புகள்)

- திருவாரூர் புராணம்

- வேதாரண்ய புராணம்

- மானாமதுரை ஸ்தல புராணம்

- திருநீடூர் தல புராணம்

- நாமக்கல் செங்கழுநீர் விநாயகர் நவரத்தின மாலை

- திரு உத்தரகோச மங்கை மங்களேஸ்வரி பிள்ளைத்தமிழ்


மதுரை திருப்புகழ் சாமி ஐயர் என்று அழைக்கப்படும் இசைக்கலைஞர் லோகநாத ஐயர்

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள்

திருமுருக கிருபானந்த வாரியார்

திருப்புகழ் மணி என்று அழைக்கப்படும் ஸ்ரீ டி. எம். கிருஷ்ணசுவாமி ஐயர்.


மண்ணாசை என்கின்ற மாயையில் வீழ்ந்து மதிமயங்கி

எண்ணாது உனை மறந்தேயிருதேன் இனியாகிலும் என்

அண்ணா உன்றன் பொன்னடிக் கமலம் வந்தடையும் வண்ணம்

தண்ணார் அருள்புரியாய் தணிகாசல சண்முகனே.


No comments:

Post a Comment