Wednesday, December 20, 2023

ஞானத்தேடல் - Ep120 - திருமழிசை ஆழ்வார் - (Gnanathedal)


 திருமழிசை ஆழ்வார்  


திருமழிசையாழ்வார் தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமாகத் திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர்


தந்தை : பார்க்கவ முனிவர்


தாய் : கனகாங்கி


திருவாளன், பங்கயச்செல்வி வளர்த்தவர்கள்




பொய்கையாழ்வார் (காஞ்சிபுரம் அருகில் திருவெக்கா) - பாஞ்சஜன்ய அம்சம்


பூதத்தாழ்வார் (கடல்மல்லை - கௌமோதகி கதை அம்சம்)


பேயாழ்வார் (திருமயிலை - நந்தகம் அம்சம்)


வேறு பெயர்கள்


பக்திசாரர்


உறையில் இடாதவர் - வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது)


குடமூக்கிற் பகவர் - என யாப்பருங்கல விருத்திகாரர் குறிப்பது இவரையே என்றும் சொல்லப்படுகிறது.


திருமழிசையார்


திருமழிசைபிரான்


திருவெஃகா திருத்தல பெருமாளுக்கு பல ஆண்டுகள் தொண்டாற்றி வந்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டியின் விருப்பப்படி அவளுக்கு இளமை வரம் கொடுத்தார்


கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய

செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்




கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய

செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்படுத்துக் கொள்.


"ஓர் இரவு இருக்கை" என்று அழைக்கப்பட்டு இன்று மருவி "ஓரிக்கை"


நான்முகன் திருவந்தாதி


நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்

தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் - யான்முகமாய்

அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,

சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து


தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்

ஆருமறியார் அவன்பெருமை ஓரும்

பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்

அருள்முடிவ தாழியான் பால்


இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்

நின்றாக நின்னருளென் பாலதே - நன்றாக

நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே

நீயென்னை யன்றி யிலை


திருவேங்கடம் பற்றி நிறைய பாடல்கள் உள்ளது


இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்

இனியறிந்தேன் எம்பெருமான் உன்னை - இனியறிந்தேன்

காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை

நாரணன்நீ நன்கறிந்தேன் நான்


திருச்சந்த விருத்தம்


பூநிலாய வைந்துமாய்ப்

      புனற்கண்நின்ற நான்குமாய்,

தீநிலாய மூன்றுமாய்ச்

      சிறந்தகா லிரண்டுமாய்,

மீநிலாய தொன்றுமாகி

      வேறுவேறு தன்மையாய்,

நீநிலாய வண்ணநின்னை

      யார்நினைக்க வல்லரே


சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,

அவையும் நீயே, அடு போர் அண்ணால்

அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;

முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்

ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே;

இரண்டின் உணரும் வளியும் நீயே;

மூன்றின் உணரும் தீயும் நீயே;

நான்கின் உணரும் நீரும் நீயே;

ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே

அதனால், நின்மருங்கின்று மூவேழ் உலகமும்

மூலமும் அறனும் முதன்மையில் இகந்த

காலமும் விசும்பும் காற்றொடு கனலும்

- பரிபாடல் (நல்லெழுதியார்)


பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடையிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

- மாணிக்கவாசகர் (போற்றித் திருஅகவல்)


தன்னுளேதி ரைத்தெழும்

      தரங்கவெண்த டங்கடல்

தன்னுளேதி ரைத்தெழுந்

      தடங்குகின்ற தன்மைபோல்,

நின்னுளேபி றந்திறந்து

      நிற்பவும் திரிபவும்,

நின்னுளேய டங்குகின்ற

      நீர்மைநின்கண் நின்றதே


குலங்களாய வீரிரண்டி

      லொன்றிலும்பி றந்திலேன்,

நலங்களாய நற்கலைகள்

      நாவிலும்ந வின்றிலேன்,

புலன்களைந்தும் வென்றிலேன்பொ

      றியிலேன்பு னித,நின்

இலங்குபாத மன்றிமற்றொர்

      பற்றிலேனெம் மீசனே


ஆறுமாறு மாறுமாயொ

      ரைந்துமைந்து மைந்துமாய்,

ஏறுசீரி ரண்டுமூன்று

      மேழுமாறு மெட்டுமாய்,

வேறுவேறு ஞானமாகி

      மெய்யினொடு பொய்யுமாய்,

ஊறொடோ சை யாயவைந்து

      மாய ஆய மாயனே


ஆழ்வார்கள் திருவடிகள் சரணம்


Friday, December 15, 2023

ஞானத்தேடல் - Ep119 - நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை - (Gnanathedal)


நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை


வைணவர்களின் தமிழ் மறை


நான்கு வேதங்களின் சாரம்


12 ஆழ்வார்கள்


24 பிரபந்தங்கள்


நூலாக தொகுத்தவர் நாதமுனிகள் (தனி கதை)


முதலாழ்வார்கள் அயோநிஜர்கள்


பொய்கையாழ்வார் (காஞ்சிபுரம் அருகில் திருவெக்கா) - பாஞ்சஜன்ய அம்சம்


பூதத்தாழ்வார் (கடல்மல்லை - கௌமோதகி கதை அம்சம்)


பேயாழ்வார் (திருமயிலை - நந்தகம் அம்சம்)


பொய்கையாழ்வார்


வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று


ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,

ஈரடியும் காணலா மென்னெஞ்சே - ஓரடியில்

தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,

மாயவனை யேமனத்து வை


பூதத்தாழ்வார்


அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்


மாலே. நெடியானே. கண்ணனே, விண்ணவர்க்கு

மேலா. வியந்துழாய்க் கண்ணியனே - மேலால்

விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்

அளவன்றால் யானுடைய அன்பு


பேயாழ்வார்


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,

என்னாழி வண்ணன்பால் இன்று


சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்

தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த

வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,

தேனமரும் பூமேல் திரு



ஈரத்தமிழ்


மொழியால் பக்தி பக்தியால் மொழி வளர்ந்தது


ஆழ்வார்கள் திருவடிகள் சரணம்

Sunday, December 10, 2023

ஞானத்தேடல் - Ep118 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கரந்தை, குளவி, கூதளம் - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  கரந்தை, குளவி, கூதளம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்


எண்ணும்‌ எழுத்தும்‌ எழுத்திற்‌ கனிந்த இயலிசையும்‌ 

பண்ணும்‌ பரதமும்‌ பாவகை யாவும்‌ படைத்தளித்தெம்‌ 

கண்ணும்‌ மனமும்‌ கருத்தும்‌ இனிக்கக்‌ கரந்தையினில்‌ 

நண்ணும்‌ மலரடி நாவார வாழ்த்துதும்‌ நற்றமிழே !

- கரந்தைக்‌ கோவை (தமிழ்‌ வாழ்த்து)


கரந்தைத் தமிழ்ச் சங்கம் 

தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியான கருந்தட்டைகுடியில் 1911ல் நிறுவப்பட்டது.

தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்த பாடலை பாட வேண்டும் என்ற கோரிக்கை 1913 ஆம் ஆண்டு  ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 1914 முதல் கரந்தை தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிவந்தனர். அதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு அரசு அப்பாடலை தம்ழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.


வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்


ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்

சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்

தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்

அனைக்கு உரி மரபினது கரந்தை

- தொல்காப்பியம் பொருளதிகாரம் 6


நெற்பயிர் அறுவடைக்கு பிறகு வயல்களிலும் முளைத்து கிடக்கும். நல்ல மணம் கொண்ட சிறு செடியினம்.

காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் – பதி 40/5

கரந்தை அம் செறுவில் துணை துறந்து களவன் - ஐங் 26

கரந்தை அம் செறுவின் வெண்_குருகு ஓப்பும் - அகம் 226


நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை - புறநானூறு 261


இது கொடிப் பூ மான்மடிக் காம்பு ஆவூர் மூலங்கிழார்

நறும் பூங் கரந்தை” என்றமைந்த தொடர் இதன் மணத்தைச் சொல்லுகின்றது.  . 


அம்பு கொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின்

செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி

வரிவண்டு ஆர்ப்பச் சூட்டி


செம் பூ கரந்தை புனைந்த கண்ணி – அகம் 269/11


வாந்தி யரோசகத்தை மாற்றும் பசிகொடுக்கும் 

சாய்ந்த விந்து வைக்கட்டுந் தப்பாதே- ஏந்தழகைத்

தண்டா துறச்சோர்க்குஞ் சாந்த பரிமளத்தைத்

தண்டாச் சிவகரந்தை என்று அகத்தியர் இதன் சிறப்பை பாராட்டுகிறார்.


கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு

வெட்டை தனியுமதி மேகம்போந்- திட்டச்

சொறிசிரங்கு வன்கரப்பான் றேற்றாது நாளும்

மறிமலமுந் தானிறங்கு மால்"


குளவி


நாறுஇதழ்க் குளவியொடு கூதளம் குழைய என்று புறப்பாடல் (380:7) சுட்டுகிறது.


கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக்

குளவி மேய்ந்த மந்தி துணையொடு

வரைமிசை உகளும் நாட! நீ வரின்,

கல் அகத்தது எம் ஊரே;

அம்பல் சேரி அலர் ஆங்கட்டே

ஐங்குறுநூறு 279


குல்லை,குளவி, கூதளம், குவளை,        

இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் 

என்ற பாடல் (நற்றிணை, 376:5-6) உணர்த்துகிறது. 


அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு

வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்

என்று திருமுருகாற்றுப்படை (வரிகள்: 191-192) சுட்டுகின்றது.


நீர்இழி மருங்கின் ஆர்இடத்து அமன்ற

குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி

அசையா நாற்றம் அசை வளி பகர

என்று அகம் (272:7- 9) பாடுகிறது.


எருதுப்போர்

இனத்தில் தீர்த்த துளங்குஇமில் நல்லேறு

மலைத்தலை வந்த மரைஆன் கதழ்விடை

மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்

கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப

வள்இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய

நல்ஏறு பொரூஉம் கல்என் கம்பலை

என்று மலைபடுகடாம் (வரிகள் : 330-335) நயம்படக் காட்டுகிறது.


கூதளம்


கூதளி / வெண்டாளி / தாளிக்கொடி


கார் எதிர் தண் புனம் காணின் கை வளை

நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த

வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர்

ஆர் கழல்பு உகுவ போல

சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/4-8


ஆதாளியை ஒன்று அறியேனை அறத்

தீதாளியை ஆண்டது செப்புமதோ

கூதாள கிராத குலிக்கிறைவா

வேதாள கணம் புகழ் வேலவனே


வாழி! கரந்தைத்‌ தமிழ்ச்சங்கம்‌ வண்ணமுற 

வாழி! அதன்‌ வாய்மைச்‌ சிறப்புரைக்கும்‌ கோவையொடு 

வாழி! தமிழ்நாடு வான்புலவர்‌ வாழ்தமிழர்‌ 

வாழி! தமிழ்‌ பாடும்‌ வாய்‌.


ஞானத்தேடல் - Ep 117 - திருப்புகழ் சுப்பிரமணிய பிள்ளை (Gnanathedal)


 திருப்புகழ் சுப்பிரமணிய பிள்ளை


பூவரு மம னயிற்கரச் செவ்வேள் பொன்னடி யேநினைந் துருகித்

தரவரு மருண கிரிப்பெருங் கவிஞன் சாற்றிய திருப்புகழ் பலவும்

மேவரு நிலையை யுணர்ந்தவ னருளே மெய்த்துணை யாக்கொடுதேடி

யாவரும் பெறச்செய் சுப்பிரமணிய வேந்தல்சீ ரியம்புறற்பாற்றோ


வடக்குப்பட்டு தணிகாசலம் சுப்பிரமணிய பிள்ளை என்னும் வ.த. சுப்பிரமணிய பிள்ளை, செங்கல்பட்டில், 1846 டிசம்பர் 11ம் நாளன்று தணிகாசலம் பிள்ளை-இலக்குமியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.


வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர் களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர்.


வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை

மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே...


பொருள்:


வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே....


திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,


“எம் அருணகிரிநாதன் ஓதும்

   பதினாராயிரந் திருப்புக ழுமுதமே”

-வரகவி மார்க்க சகாய தேவர்


தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின.....


(1) 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன.

(2) 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன.

(3) அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன.

(4) 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன.

(5) 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.


உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது "என் சரித்திரம்" நூலில் பதிவுசெய்துள்ளார்.


அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,


"எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே" என்ற வாக்கால் கூறியுள்ளார்.


ஆனால் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் மட்டுமே சேகரிக்க முடிந்தது.


திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார்.


1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார்.


வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.


- இவரது மறைவிற்குப் பின் இவரது மகன்களான வ.சு. சண்முகம் பிள்ளை மற்றும் வ.சு. செங்கல்வராய பிள்ளை இருவரும் இணைந்து திருப்புகழ்ப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர்.

- அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் ஸ்ரீ செங்கல்வராயன், பணியை முன்னெடுத்துச் சென்று மேலும் பல பாடல்களைப் பெற்று, கந்தர் அநுபூதி, அலங்காரம், வகுப்பு உள்ளிட்ட திருப்புகழ்ப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டார். செங்கல்வராயன் திருப்புகழ் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து, “அருணகிரிநாதர் வரலாறு, நூல் ஆராய்ச்சியும்” என்ற தலைசிறந்த படைப்பை வெளியிட்டார். 

- இவருடைய வாழ்க்கை வரலாற்றை 121 பாடல்களாக 'திருப்புகழ் சுப்பிரமணிய நாயனார்’ என்ற தலைப்பில் வரகவி தென்னுர் சொக்கலிங்க பிள்ளை பாடியுள்ளார்.

- வ.சு. செங்கல்வராய பிள்ளையும் தந்தையின் மறைவுக்குப் பின் அவரது வாழ்க்கை வரலாற்றை, 'வ. சுப்பிரமணிய பிள்ளை சரித்திரம்’ என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்திருக்கிறார்.


நூல்கள்


எழுதியவை


- பிரச்னோத்திர காண்ட வசனம்

- கோகர்ணபுராண சாரம்

- சுந்தர விளக்கம் (1904)

- சிவஸ்தல மஞ்சரி (1905)


பதிப்பித்தவை


- திருப்புகழ் (இருபதிப்புகள்)

- திருவாரூர் புராணம்

- வேதாரண்ய புராணம்

- மானாமதுரை ஸ்தல புராணம்

- திருநீடூர் தல புராணம்

- நாமக்கல் செங்கழுநீர் விநாயகர் நவரத்தின மாலை

- திரு உத்தரகோச மங்கை மங்களேஸ்வரி பிள்ளைத்தமிழ்


மதுரை திருப்புகழ் சாமி ஐயர் என்று அழைக்கப்படும் இசைக்கலைஞர் லோகநாத ஐயர்

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள்

திருமுருக கிருபானந்த வாரியார்

திருப்புகழ் மணி என்று அழைக்கப்படும் ஸ்ரீ டி. எம். கிருஷ்ணசுவாமி ஐயர்.


மண்ணாசை என்கின்ற மாயையில் வீழ்ந்து மதிமயங்கி

எண்ணாது உனை மறந்தேயிருதேன் இனியாகிலும் என்

அண்ணா உன்றன் பொன்னடிக் கமலம் வந்தடையும் வண்ணம்

தண்ணார் அருள்புரியாய் தணிகாசல சண்முகனே.