Friday, April 26, 2024

ஞானத்தேடல் - Ep 138 - சேந்தனார் திருப்பல்லாண்டு - (Gnanathedal)


 சேந்தனார் திருப்பல்லாண்டு


மத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னினானும்

நித்தமும் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்தி

செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட

கைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டுளானே.

-தனிப்பாடல்


செம்பொன் அம்பலத்து வேந்தன் தனக்கு ..... ஆகியதே என வரும் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் (தி.11 ப.33 பா.26) நாம் அறியலாம்.


வரையேற விட்டமுதம் சேந்தனிட உண்டனை


என்னும் சிவஞான சுவாமிகளின் பாடலால் அறியலாம்.


"சேந்தா தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக"


திருவிடைக்கழி - சேந்தன்மங்கலம். இவ்வூர் திருவிடைக்கழிக்கு அருகில் இன்றும் இப்பெயருடன் இருக்கின்றது.


இவ்வூரில் இருந்த சேந்தனார் வழிபட்ட திருக்கோயில் அண்மைக் காலத்தில் அழிந்துவிட்டது. அங்குக் கிடைத்த சிவலிங்கத் திருவுருவத்தை மட்டிலும் அவ்வூரின் அருகில் உள்ள விசலூரில், சிறுகோயில் எடுத்து எழுந்தருளச் செய்துள்ளனர்.


திருப்பல்லாண்டு


மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்

வஞ்சகர் போயகலப்

பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து

புவனியெல் லாம்விளங்க

அன்ன நடைமட வாள்உமை கோன்அடி

யோமுக் கருள்புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்

பல்லாண்டு கூறுதுமே. (1)


மிண்டு மனத்தவர் போமின்கள்

மெய்யடியார்கள் விரைந்து வம்மின்

கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்

செய்மின் குழாம்புகுந்

தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்

ஆனந்த வெள்ளப்பொருள்

பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே

பல்லாண்டு கூறுதுமே (2)


நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட

நிகரிலா வண்ணங்களும்

சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந்

திறங்களு மேசிந்தித்

தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும்

அமிர்தினுக் காலநிழற்

பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (3)


சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த

தூய்மனத் தொண்டருள்ளீர்

சில்லாண் டிற்சிதை யும்சில தேவர்

சிறுநெறி சேராமே

வில்லாண்டகன கத்திரள் மேரு

விடங்கன் விடைப்பாகன்

பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (4)


புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட்

டின்னம் புகலரிதாய்

இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக்

கென்செய வல்லம்என்றும்

கரந்துங் கரவாத கற்பக னாகிக்

கரையில் கருணைக்கடல்

பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே

பல்லாண்டு கூறுதுமே (5)


சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்

எங்குந் திசைதிசையன

கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா

மாய்நின்று கூத்தாடும்

ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை

அப்பனை ஒப்பமரர்

பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (6)


சீரும் திருவும் பொலியச் சிவலோக

நாயகன் சேவடிக்கீழ்

ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற

தார்பெறு வார்உலகில்

ஊரும் உலகும் கழற உழறி

உமைமண வாளனுக்காட்

பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்

பல்லாண்டு கூறுதுமே (7)


சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங்

கொங்கையிற் செங்குங்குமம்

போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று

புண்ணியர் போற்றிசைப்ப

மாலும் அயனும் அறியா நெறிதந்து

வந்தென் மனத்தகத்தே

பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (8)


பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்

பாற்கடல் ஈந்தபிரான்

மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்

மன்னிய தில்லைதன்னுள்

ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்

பலமே இடமாகப்

பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (9)


தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ்

வண்டத் தொடுமுடனே

பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்

போனக மும் அருளிச்

சோதி மணிமுடித் தாமமும் நாமமும்

தொண்டர்க்கு நாயகமும்

பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (10)


குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி

எங்கும் குழாம்பெருகி

விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி

மிகுதிரு வாரூரின்

மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்

மணஞ்செய் குடிப்பிறந்த

பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (11)


ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்

அணியுடை ஆதிரைநாள்

நாரா யணனொடு நான்முகன் அங்கி

இரவியும் இந்திரனும்

தேரார் வீதியில் தேவர் குழாங்கள்

திசையனைத்தும் நிறைந்து

பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்

பல்லாண்டு கூறுதுமே (12)


எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு

தாம்மெம் பிரான்என் றென்று

சிந்தை செய்யும் சிவன் சீரடியார்

அடிநாய் செப்புரை

அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்

தாண்டுகொண் டாருயிர்மேற்

பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று

பல்லாண்டு கூறுதுமே (13)

Monday, April 22, 2024

ஞானத்தேடல் - Ep 137 - கொடிக்கவி - (Gnanathedal)


 கொடிக்கவி


மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன.


உந்தி களிறு உயர்போதம் சித்தியார்

பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட்

பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு

உண்மைநெறி சங்கற்ப முற்று


சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.


திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்

சிவஞான சித்தியார் - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்

இருபா இருபது - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்

உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்

சிவப்பிரகாசம் - உமாபதி சிவாசாரியார்

திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார்

வினாவெண்பா - உமாபதி சிவாசாரியார்

போற்றிப்பஃறொடை - உமாபதி சிவாசாரியார்

கொடிப்பாட்டு - உமாபதி சிவாசாரியார்

நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்

உண்மைநெறி விளக்கம் - உமாபதி சிவாசாரியார்

சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்


கொடிக்கவி


ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்

றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்

தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே

குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.



பொருளாம் பொருளேது போதேது கண்ணே

திருளாம் வெளியே திரவே - தருளாளா

நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்

கோபுர வாசற் கொடி.


வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்

தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்

பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே

குறிக்குமரு ணல்கக் கொடி.


அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்

பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்

பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்

கூசாமற் காட்டாக் கொடி.


அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்

கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை

மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்

கூறாமல் கூறக் கொடி.


ஞானத்தேடல் - Ep 136 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தாழை, தளவம், தாமரை - (Gnanathedal)


குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  தாழை, தளவம், தாமரை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்.  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

தாழை, தளவம், முள் தாள் தாமரை


தாழை


மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம்,

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா, 

கடல் பெரிது, மண் நீரும் ஆகாது அதன் அருகே 

சிறு ஊறல் உண் நீரும் ஆகிவிடும்.


தெங்கின் இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு — புறநானூறு 29

கோள் தெங்கின் குலை வாழை — பொருநராற்றுப்படை 

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த — பெரும்பாணாற்றுப்படை 


தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் (நன்னூல் 187) 


நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் எனவேண்டா – நின்று

தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்.

மூதுரை, ஔவையார்


வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி

வேய்முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்.

- பழமொழி நானூறு


தளவம்


பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை,

ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப,

ஐங்குறுநூறு 447


புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை

நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,

காடே கம்மென்றன்றே; அவல

அகநானூறு 23


பிடவம் மலர, தளவம் நனைய

கார்கவின் கொண்ட கானம் காணின்

ஐங்குறுநூறு 499


தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை

முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை

பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல

வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று

காரிது பருவம் ஆயின்

வாரா ரோநம் காத லோரே.

- குறுந்தொகை 382


தாமரை


செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி

பாதம் போற்றும் வாதவூர் அன்ப

பா எனப்படுவது உன் பாட்டு

பூ எனப்படுவது பொறிவாழ் பூவே

- நால்வர் நான்மணிமாலை


நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்.

- மூதுரை, ஔவையார்


மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்

இதழகத் தனைய தெருவம் இதழகத்

தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்

தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்

தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர்

பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த

நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப

ஏம வின்றுயில் எழுதல் அல்லதை

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

கோழியின் எழாதெம் பேரூர் துயிலே.

- பரிபாடல் திரட்டு 8


பொய்கை. போர்க்களம் புறவிதழ் புலவு வாட்படை புல்லிதழ்

ஐய கொல்களி றகவித ழரச ரல்லிதன் மக்களா

மையில் கொட்டையம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையாற்

பையவுண்டபின் கொட்டைமேற் பவுத்திரத் தும்பி பறந்ததே'

- சீவக சிந்தாமணி


முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக்

கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்

அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும்

- திருமுருகாற்றுப்படை


மன்உயிர் அறியாத் துன்அரும் பொதியில்

சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,

வேனிலானே தண்ணியள்; பனியே,

வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,

அலங்கு வெயிற் பொதிந்த தாமரை

உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே

- குறுந்தொகை 376- (படுமரத்து மோசிக்கொற்றனார்)


Biophysics and Physiology of Temperature Regulation in Thermogenic Flowers

Thermoregulating lotus flowers – Nature 1996


விளக்கின்அன்ன சுடர்விடு தாமரை - நற்றிணை 310

சுடர்ப் பூந்தாமரை - அகநானூறு 6

எரி அகைந்தன்ன தாமரை - அகநானூறு 106


வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்

கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்

- நற்றிணை 290


தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம்

வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும்

பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரைக்

கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே

- விவேகசிந்தாமணி


Sunday, April 07, 2024

ஞானத்தேடல் - Ep 135 - சித்திரக்கவி - மாலைமாற்று - (Gnanathedal)


 சித்திரக்கவி - மாலைமாற்று

சீகாழி – திருமாலைமாற்று

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

– திருஞானசம்பந்தர்

---------------------------------------------------------

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா (1)

யாம் ஆமா - நீ ஆம் ஆம் - மாயாழீ - காமா- காண் - நாகா
காணாகாமா - காழீயா - மாமாயாநீ - மா - மாயா
---------------------------------------------------------

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா (2)

யாகா - யாழீ - காயா - காதா - யார் ஆர் - ஆ - தாய் ஆயாய் -
ஆயா - தார் - ஆர் ஆயா - தாக ஆயா - காழீயா - கா யா
---------------------------------------------------------

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா (3)

தாவா - மூவா -  தாசா -  காழீநாதா - நீ -  யாமா -  மா
மா - யா நீ - தானாழி - காசா - தா - வா - மூ - வாதா
---------------------------------------------------------

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ (4)

நீவா - வாயா - கா - யாழீ - காவா - வான்நோவாராமே
மேரா - வான் - நோவாவா - காழீயா - காயா - வாவா நீ
---------------------------------------------------------

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா (5)

யா - காலா -  மேயா - காழீ யா -  மேதாவீ - தாய் ஆவி
வீயாதா -  வீதாம் -  மே - யாழீ - யாம் - மேல் - ஆகு - ஆயா
---------------------------------------------------------

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே (6)

மேலேபோகாமே - தேழீ - காலாலே - கால் ஆனாயே
ஏல் - நால் - ஆக - ஆல் - ஏலா - காழீதே - மேகா - போலேமே
---------------------------------------------------------

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ (7)

நீயா - மாநீ - ஏயா - மாதா - ஏழீ - காநீதானே
நே - தாநீ - காழிவேதா - மாயாயேநீ - மாய் - ஆநீ
---------------------------------------------------------

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே (8)

நேணவராவிழயாசைழியே (நே, அணவர், ஆ, விழ, யா, ஆசை, இழியே) - வேகதளேரியளாயுழிகா (வேக(ம்) அதரி ஏரி, அளாய உழி, கா)
காழியு(ள்)ளாய்! - அரிளேதகவே (அரு, இளவு, ஏது, அகவே) - ஏழிசை இராவணனே
---------------------------------------------------------

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

காலே - மேலே - காண்  நீ - காழீ - காலே மாலே - மே பூ
பூ - மேல் ஏ(ய்) - - மாலே - காழீ! காண் - காலே மேலே கா.
---------------------------------------------------------

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

வேரியும் - ஏண் - நவ- காழியொயே - ஏனை -  நீள்நேம் - அடு - அள் - ஓகரது ஏ
தேரகளோடு - அமணே - நினை - ஏய் - ஒழி - காவணமே - உரிவே
---------------------------------------------------------

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

நேர் - அகழ் ஆம் - இதய ஆசு - அழி - தாய் ஏல் நன் நீயே - ஏல் + ந + அன் -ஆய் உழிகா
காழியுளானின் - நினையே - நினையே - தாழ்(வு) - இசையா - தமிழாகரனே